மனு கொடுக்கும் போராட்டம்
பெரியமணலியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
நாடுமுழுவதும் தற்சமயம், அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்தியஅரசு அமுல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தை தமிழகத்தில் கைவிட வேண்டும். இதனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் மானிய மின்சாரமும் தடைபடும். சிறு, குறு தொழில் செய்பவர்கள், குடியிருப்பு வீடுகள், தோட்டங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தும் மின்சாரம் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற விலையேற்றங்களை போன்றே மின்சார கட்டணமும் உயரும் அபாயம் உள்ளது.
இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி மின்சார வாரிய அலுவலம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழுஉறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழுஉறுப்பினர்கள் துரைசாமி, ஈஸ்வரன், ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி நன்றியுரையாற்றினார்.