குழாய் உடைப்பால் வெளியேறிய இயற்கை எரிவாயு - பொதுமக்கள் அச்சம்
பட்டணம்காத்தான் பகுதியில் குழாய் உடைந்து இயற்கை எரிவாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக சிஎன்ஜி எரிவாயு (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இணைப்பு வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் வழுதூர் பகுதியில் உள்ள இந்திய எரிவாயு கழகத்திடம் இருந்து சிஎன்ஜி வாயுவை பெற்று, வாலாந்தரவை பகுதியில் சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் சேமிக்கிறது.
இந்நிலையத்திலிருந்து முதற்கட்டமாக பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் மூலம் வாகனங்களுக்கான சிஎன்ஜி நிரப்பும் மூன்று நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பட்டணம்காத்தான் பழைய காவல் சோதனைச் சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பணி செய்யும்போது, திடீரென சிஎன்ஜி எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் தீப்பற்றி அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்தனர். பின்னர் 20 நிமிடங்களில் தனியார் நிறுவனத்தினர் வந்து எரிவாயு வெளியேறுவதை அடைத்தனர். இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.