படப்பை வழியே மேம்பால பணியால் கனரக வாகனங்கள் செல்ல தடை காவல்துறை அறிவிப்பு
படப்பை மேம்பால பணியால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, படப்பை வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:18 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மேம்பால பணியால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, படப்பை வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு, ஜன., மாதம் துவங்கியது. மேம்பாலம் கட்டுமான பணிக்காக சாலையில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், படப்பை பஜார் பகுதியில் ஒருபுறம் இருந்து மறுபுற சாலைக்கு செல்ல ஒரு கி.மீ., துாரம் வரை வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலையில் உள்ளது. மேலும், படப்பை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியரை ஏற்றிச் செல்ல பேருந்துகள் நின்று செல்வதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. எனவே, படப்பை பஜார் பகுதியல் நெரிசலை குறைக்க, இருபுறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மேம்பாலம் பில்லர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பில்லர் மீது மேல்தளம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதனால், சாலையின் அகலம் மேலும் குறையும். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க, நேற்று முதல், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, லாரி, கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இவ்வழியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. "