ரவுடிகளை விரட்டி பிடிக்க முயன்ற காவலருக்கு அரிவாள் வெட்டு
திருச்சியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 ரவுடிகளை விரட்டி பிடிக்க முயன்ற காவலர்ருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால், பரபரப்பு உண்டானது.;
திருச்சியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 ரவுடிகளை விரட்டி பிடிக்க முயன்ற காவலர்ருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால், பரபரப்பு உண்டானது.
கடந்த சில நாட்களாக திருச்சி மாநகர பகுதிகளில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வந்த நிலையில், இதனை தடுக்க திருச்சி மாநகர ஆணையர் காமினி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் இன்று(29-06-2024) அதிகாலை திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி கோட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட ரௌடிகள் மூவரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அவர்களை போலீசார் துரத்தி சென்று அண்ணா சிலை பகுதி அருகே பிடிக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த ரவுடிகளில் ஒருவன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அப்துல் காதரின் வலது கை, கன்னத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே சரிந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவுடிகள் மூவரும் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய மூவரையும் பிடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி (வயது 17), சிலம்பு (16), நித்திஷ் (17) ஆகிய மூவரையும் தற்போது கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் மீதான தாக்குதல் சம்பவம் திருச்சி போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயம்பட்ட அப்துல் காதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.