பொள்ளாச்சி : 250 கிலோ ரசாயன மாம்பழங்கள் பறிமுதல்
பொள்ளாச்சி பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட் பகுதிகளில் செயல்படும் பழக்கடைகளில் ரசாயனம் மற்றும் கார்பைட் கல் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.. இதனை அடுத்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் செயற்கையாக பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல் மற்றும் ரசாயனம் கலந்த பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.. இதை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் கலந்து வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கிற்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டன.
ரசாயனம் வைக்கப்பட்டு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழ வகைகளை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் கண் எரிச்சல், வாந்தி பேதி போன்ற உபாதைகள் உண்டாக்கலாம் சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது எனவே இது போன்ற முறையற்ற விதத்தில் ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்தால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பழ வியாபாரிகளை எச்சரித்தனர்.