பட்டு வேட்டி ,சட்டை அணிந்து தூய்மை பணியாளர்கள் பொங்கல் கொண்டாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் தூய்மை பணியாளர்கள் பட்டு வேட்டி, சேலையில் கலந்து கொண்டு பண்டிகையை கொண்டாடினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகம் செவிலிமேடு பகுதியில் இயங்கி வருகிறது.ஏழு வார்டுகளை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், நாளை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மண்டல அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர் ஆண்களுக்கு பட்டு சட்டை வேட்டியும், பெண் பணியாளர்களுக்கு சேலையும் வழங்கி அவர்களை புத்தாடை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்தனர். சமத்துவ பொங்கல் விழாவினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி , மண்டல குழு தலைவர் மோகன் ஆகியோர் பொங்கல் விழாவை புது பானையில் பச்சரிசி இட்டு துவக்கி வைத்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.எப்போதுமே பணியில் உள்ள நிலையில் பொதுவாகவே அவர்களுடைய குடும்ப விழாவில் மட்டுமே பட்டு வேட்டி சட்டையுடன் காணப்படும் நிலையில் தற்போது பொங்கல் கொண்டாட்ட விழாவில் சமத்துவம் காணும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்தும் பெண்கள் சேலை அணிந்தும் காணப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சித்தன், சண்முகனாந்தம் , கார்த்திக் , பானுப்ரியா சிலம்பரசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.