பொங்கல் விடுமுறை எதிரொலி: சேலத்தில் பயணிகள் கூட்டம்
பொங்கல் விடுமுறை எதிரொலியாக சேலத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் இன்று (சனிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேலத்தில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் நேற்று மாலை தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் சேலம் புதிய பஸ்நிலையத்தில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சேலத்தில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை, வேலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒருசிலர் நீண்ட நேரம் காத்திருந்த தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. அதேசமயம், அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் மூலம் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் ஏறி ஊர்களுக்கு சென்றனர்.
இதனால் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் இருக்கைகள் நிரம்பியதால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல், பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் நேற்று பிற்பகல் முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது.