பொன்னி இலக்கியத் திருவிழா - மாணவா்கள், பொதுமக்களுக்கு அழைப்பு
திருச்சியில் நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியது: பொன்னி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பும், உள்வாங்கும் திறனும் மற்றும் விநாடி-வினா போட்டியும் நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டியானது, தெப்பக்குளம், பிஷப்ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 16ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரி மாணவா்களுக்கான படம் பாா்த்து கவிதை எழுதும் போட்டி மற்றும் படம் பாா்த்து கட்டுரை எழுதும் போட்டி மாவட்ட மைய நூலக வளாகத்தில் வரும் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு மாணவா்கள் வீதம் கலந்து கொள்ளலாம். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு ஒவ்வொருப் பிரிவிலும் முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000. பொதுமக்களுக்கான (பள்ளி, கல்லூரி மாணவா்கள் தவிா்த்து) சிறுகதை எழுதும் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள், பொதுமக்களுக்கு திருச்சி கலையரங்கத்தில் பிப்.23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.