பூம்புகார் : பருத்தி பயிரிடும் பணி துவக்கம்

பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது வயலை தயார்படுத்தி பருத்தி விதையை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-02-12 05:07 GMT

பருத்தி பயிரிடல் 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், பரசலூர், மேலையூர், பொன்செய், கீழையூர், ஆக்கூர், மேமாத்தூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், கஞ்சாநகரம், மேலப்பாதி, கருவாழக்கரை மேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு, நேரடி நெல்விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையில் சம்பா சாகுபடி செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக சம்பா பருவ நெல்லை அறுவடை செய்து அரசு நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது காளகஸ்திநாதபுரம், மேமாத்தூர், ஆக்கூர், மடப்புரம், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா அறுவடை முடிந்த வயலில் பருத்தி சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது வயலை தயார்படுத்தி பருத்தி விதையை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள காளகஸ்திநாதபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:- பருத்தி கரிசல் மண் மற்றும் வண்டல் மண், செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது. கோடைக்கால பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம். பருத்தி விதைத்து 90 நாட்களுக்கு பின்பு ஊடு பயிராக உளுந்து அல்லது தட்டை பயறு ஆகியவற்றை பயிரிடலாம். தற்போது எனது வயலில் ராசி ரக பருத்தி விதையை விதைத்துள்ளேன்.

பருத்தி 3 மாதம் சாகுபடி காலமாகவும், 3 மாதம் மகசூல் தரும் காலமாகவும் உள்ளது. விதைப்புக்கு பின் 40 அல்லது 50 நாட்கள் கழித்து பருத்தி செடியின் அடிப்பகுதியில் பொட்டாஸ், அடிஉரம், யூரியா போன்றவை செலுத்தி கைவண்டி உதவியுடன் மண்ணை சுற்றி தேக்கும் பணி (பார் அணைக்கும் பணி) நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் பூச்சி தாக்குதலில் இருந்து பருத்திச் செடியை பாதுகாக்க மேல் மருந்து தெளிப்போம். மற்ற பயிர்களை விட பருத்தி சாகுபடியில் முழுமையாக பாடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News