வட்டாட்சியர் பேச்சுவார்த்தையால் சாலைமறியல் போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு ஆய்வு செய்து தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் சாலைமறியல் ஒத்தி வைக்கப்பட்டது 

Update: 2024-06-13 07:15 GMT

சேதுபாவாசத்திரத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு ஆய்வு செய்து தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் சாலைமறியல் ஒத்தி வைக்கப்பட்டது


  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் சுமார் 500 மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூபாய் 8,000 வழங்கப்படவில்லை. இதையடுத்து, விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமை காலை பேராவூரணி அருகே உள்ள செந்தலைவயலில்  கிழக்கு கடற்கரைச் சாலையில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மீனவர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  சமாதானப் பேச்சுவார்த்தை  இந்நிலையில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அ.தெய்வானை தலைமையில் ஜூன் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளர், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர்கள், பட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர், பெருமகளூர் கிராம நிர்வாக அலுவலர் அரசுத்தரப்பிலும்,  சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வழக்குரைஞர் கருப்பையன், பி.பெரியண்ணன், ஏ.சகாப்தீன், வி.ஆர்.கே. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சிபிஎம் - சிஐடியு வலியுறுத்தல்  இந்த பேச்சுவார்த்தையில், "விடுபட்ட மீனவர்கள் குடும்பங்கள் அனைவருக்கும் தடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும். மீனவர்கள் அல்லாத பிற நபர்கள் நிவாரணம் பெற்று வருவதை ஆய்வு செய்து நிறுத்த வேண்டும். தகுதியான மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.  மீன்வளத்துறை  மீன்வளத்துறை அதிகாரி கூறுகையில்," 4,937 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4,427 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 510 நபர்களில் 145 நபர்களுக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 365 நபர்களுக்கு மட்டும் ஆவணங்கள் பொருந்தாதாலும், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வருவதாலும், நிவாரணத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிவாரணம் கிடைக்காத 365 மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து உடனடியாக வழங்கப்படும்" என உறுதி அளித்தனர். 

வட்டாட்சியர்  பின்னர் வட்டாட்சியர் கூறுகையில்," விடுபட்ட 365 மீனவர்களின் விவரங்களை ஆய்வு செய்து 15 தினங்களுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.  இதையடுத்து ஜூன் 12 புதன்கிழமை காலை நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Tags:    

Similar News