மரக்காணம் அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட மின்சாரம் தடை
மீனவர்கள் ஈ.சி.ஆர் சாலையில் சாலை மறியல்
Update: 2024-06-03 07:12 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவல நிலை உண்டானது. இந்தக் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வன விலங்குகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் பெறும் அவதிக்குள்ளானது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் பல வாரங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த அனல் காற்றின் தாக்கம் குறைந்தது. இப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பணிகுப்பம் மீனவர் பகுதியில் ஒரு சில மின் கம்பங்கள் சாய்ந்தது. மேலும் மின் உபகரணங்களும் சேதம் அடைந்தது, இதனால் கைப்பணி குப்பம் இன்று பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் நேற்று மதியம் வரையில் மின்சாரம் தடைபட்டது. இதனை சீர் செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்ட போதிலும் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கைப்பணி குப்பம் பகுதியில் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் மரக்காணம் மின்சாரத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தொலைபேசிகள் மூலம் வாக்குறுதிகளை அளித்தனர். இந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டுவிட்டு அமைதியாக கலைந்து அங்கிருந்து வீடுகளுக்கு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் இ சி ஆர் சாலையில் புதுவை - சென்னை வழிதடத்தில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.