எட்டும் உயரத்தில் மின் கம்பி - செவிலிமேடு மின் ஊழியர்கள் அலட்சியம்
இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின் கம்பிகள் கைகளுக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது.
காஞ்சிபுரம் செவிலிமேடு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை சுற்றிலும் உள்ள வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்குவதற்காக நான்கு மாட வீதிகளில் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கோவில் பின் புறம் உள்ள, மேற்கு மாட வீதியில், கோவில் மதில் சுவரையொட்டி, இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின் கம்பிகள் கைகளுக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இலகு ரக வாகனங்கள், தலைச்சுமை வியாபாரிகள் கவனக்குறைவாக மின் கம்பியில் உரசி மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், தெற்கு மாட வீதியில், கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் கிளைகள் மின் கம்பியில் உரசியபடியே உள்ளது. இதனால், காற்றடிக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு மின் கம்பி அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, செவிலிமேடு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பின்புறம் கைகளுக்கு எட்டும் துாரத்தில் உள்ள மின் ஒயர்களை சீரமைக்கவும், தெற்கு மாட வீதியில் மின் கம்பியில் உரசும் மரக்கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலி மேடு பகுதிவாசிகள்வலியுறுத்துகின்றனர்.