சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடத்திற்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய பிரதமர்..
சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சுமார் 33 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கு காணொளி அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
Update: 2024-02-25 15:33 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல சிகிச்சை மையம் அமைக்க காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த விழாவில் 5 எய்ம்ஸ் மருத்துமனைகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார கட்டமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ரூ.8.79 கோடி மதிப்பில் தாய் சேய் நல மைய புதிய கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டிடமானது 70,321 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் சேர்த்து 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது. இதில் மருத்துவ ஆய்வகம்,டிஜிட்டல் எக்ஸ்ரே,யுஎஸ்ஜி, எக்ஸ்லாம்சியா ஆய்வகம்,26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு,ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 4 அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் மொத்தம் 139 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைய உள்ளது.18 மாதங்களில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன், வருவாய் கோட்டாசியர் விஸ்வநாதன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அசோகன்,ரகுராமன், மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, சுகாதார பணிகள் இணை இயக்குநர் பாபுஜி,சிவகாசி மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.