பிரதமர் வருகையால் தமிழக பா.ஜ.க.வினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது - அண்ணாமலை

Update: 2024-01-03 11:41 GMT

அண்ணாமலை பேட்டி 

சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் பா.ஜ.க. சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக சேலம் மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் சுரேஷ் பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் தாரை, தப்பட்டை அடித்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அண்ணா மலை நிருபர்களிடம் கூறியதாவது:- எழுச்சி தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறேன். இன்று சேலம் மாவட்டத்தில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 130 தொகுதிகளில் யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 104 தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்குள் யாத்திரை நிறைவு பெறும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களுக்கு ரூ. 30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது . ஆனால் பா.ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ.120 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல முறை வருகை தந்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த விழாவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் உள்பட பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறார். சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. கடந்த 26-ந்தேதி கைது செய்து 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் வைத்து சுற்றி அழைக்கழித்துள்ளனர். அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. உள்பட 8 பிரிவுகளில் பொய்யான குற்றச்சாட்டுகளின்படி பொய்யான வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அமைச்சர் பொன்முடி சொல்லி கொடுத்துதான் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆத்தூர் அருகே விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் காட்டெருமை உள்பட வன விலங்குகள் தொடர்பாக விவசாயிகள் மீது வனத்துறைக்கு புகார்கள் சென்றது. இதனால் வனத்துறையினர் அவர்களுடைய ஆதார் கார்டு உள்பட பல்வேறு தகவல்களை கேட்டனர். இதில் விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் வராது. இதில் விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நானே வந்து விவசாயிகளுககு ஆதரவாக போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News