பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் !
10, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் கலெக்டர் வழங்கினார்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் மாணவ, மாணவிகள் 48 பேருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசு, கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலக சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் பார்த்தசாரதி, சேலம் மாநகராட்சி கூட்டமைப்பு செயலாளர் ஜம்பு, தலைவர் அண்ணாதுரை, மாநகராட்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.