சிவகங்கையில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கையில் ஜூலை 9 முதல் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-05 06:43 GMT
சிவகங்கையில் வருகிற 9-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு தொழில்நெறி நிகழ்ச்சிகள், திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு உத்தரவின்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜுலை மாதம் இரண்டாவது வாரம் தொழில்நெறி, திறன் விழிப்புணா்வு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக, பல்வேறு தொழில் நெறி, திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 9-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல், திறன் பயிற்சி விழிப்புணா்வு நிகழ்ச்சி, சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், முன்னுரிமைப் பிரிவைச் சாா்ந்தோருக்கு மத்திய, மாநில, உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. 10-ஆம் தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி, 10, 12 -ஆம் வகுப்பு, கல்லுாரி மாணவா்களுக்கு உயா்கல்வி, அரசால் வழங்கப்படும் கல்விக்கான ஊக்கத் தொகை விவரங்கள் குறித்த நிகழ்ச்சி, 11-ஆம் தேதி பொறியியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவா்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல், திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி, போட்டித் தோ்வுகள், சுயவேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்நடத்தப்படவுள்ளன. 12-ஆம் தேதி பள்ளி, கலை, அறிவியல் கல்லுாரி மாணவா்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, 15-ஆம் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் மாணவா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல், தொழில் பழகுநா் பயிற்சி, சுய வேலைவாய்ப்பு, ராணுவத்தில் வேலைவாய்ப்பு, தனியாா் துறை வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு விழிப்புணா்வு அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்படவுள்ளன. மேலும், 15-ஆம் தேதி உலக இளைஞா் திறன் நாள் கொண்டாடுவதால், வேலை நாடுநா்களும் இந்த தொழில் நெறி வழிகாட்டல், திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இதில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞா்கள் 04575-245225 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.