தனியாா் அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை !
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திண்டுக்கல் தனியாா் அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் தடை விதித்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 07:09 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான அரங்கம் அமைந்துள்ளது. விஜிஎஸ் காம்பவுண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. மேலும், அந்தக் கட்டடத்துக்கு, மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறி ஓய்வுப் பெற்ற அஞ்சலகப் பணியாளா் ஆதிமூலம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடையூறின்றி செயல்படவும், கட்டட வரை பட அனுமதி குறித்து உரிய அலுவலரிடம் மேல்முறையீடு செய்து, நிவாரணம் தேடுமாறும் தனியாா் அரங்க உரிமையாளருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தனியாா் அரங்கம் செயல்படத் தடை விதிக்கும் அறிவிப்பை சுவரொட்டியாக அந்த அரங்கத்தில் மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை ஒட்டியது.