ரூ.6.40 கோடியில் திட்ட பணி திருவொற்றியூரில் துவக்கம்
திருவொற்றியூரில் ரூ.6.40 கோடியில் திட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதி மற்றும் சென்னை மாநகராட்சி நிதியின் கீழ், 6.40 கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்று, எண்ணுார், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில், பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி, காசி கோவில் குப்பம் மற்றும் பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில், 3.30 கோடி ரூபாய் செலவில், எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி. தாழங்குப்பம் மற்றும் 2வது வார்டில், தலா, 75 லட்சம் ரூபாய் செலவில் இரவு நேர தங்கும் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிகளை, பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இரண்டாவது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட கத்திவாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம், 4வது வார்டில், ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு மையம் கட்டடம்; 22வது வார்டு, மணலி - சின்னசேக்காடு பகுதியில் நியாயவிலைக் கடைகள் செயல்படும் வகையிலான, பன்னோக்கு கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சிவகுமார், கோமதி, ஜெயராமன், தீர்த்தி, சொக்கலிங்கம், தம்பையா என்ற தமிழரசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை கலெக்டர் சுமதி, மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.