ஆத்தூரில் ரயில்வே சுரங்கபாதை அமைக்க எதிர்ப்பு:தேர்தல் புறகணிப்பு பேனர்
ஆத்தூரில் ரயில்வே சுரங்கபாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலை புறகணிக்க போவதாக பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுகோட்டை வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது.
இதன் அருகில் சேலம்- விருதாச்சலம் ரயில் வழி பாதையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சுரங்கப்பாதை அமைந்தால் மழை காலங்களில் சுரங்க பாதையில் தண்ணீர் சேர்ந்து நிற்கும்.
அது மட்டுமல்லாமல் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும் மிகுந்த சிரமம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.எனவே ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே சுரங்கபாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊர் பொதுமக்கள் சார்பாக விளம்பரப் பதாகை ( பேனர்) கருப்பு கொடி கட்டி வைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக காவல் துறையினர் உடனடியாக தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது