லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற சாயத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயத் தொழிற்சாலைகள் சாயக் கழிவுகளை சுத்திகரிக்காமல் சாயக்கழிவு நீரை தங்கள் தொட்டிகளில் சேகரித்து அந்த நீரை சுத்திகரிக்காமல் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் நேரடியாக காவிரி ஆற்றில் கழிவு நீரை கலந்து வருகின்றனர்.
இதனால் குடிநீர் மாசு ஏற்படுவது உடன் தொற்று நோய்கள் பரவி வருகின்றது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும்,குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், லோக் ஜன சக்தியின் சார்பில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆதவன் தலைமையில் ஆவத்தி பாளையம் பகுதியில் பறையடிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பறையடிக்கும் போராட்டத்திற்கு பள்ளிபாளையம் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டகாரர்கள் சாயக் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தட்டி எழுப்பும் விதமாக விசில் அடிக்கும் கைகளை தட்டியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் பிரபு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட லோக் ஜனசக்தி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மக்கள் நீதி மய்யம், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் தமிழர் கட்சி சின்னம்மா பேரவை மாநில செயலாளர் ஆறுமுகம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.