அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் வாயில் கருப்புதுணி கட்டி எதிர்ப்பு
அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் வாயில் கருப்புதுணி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் சிலவற்றை நிர்வாக வசதிக்காக பேரூராட்சிகளுடன் இணைக்கவும், சிலவற்றை அருகில் உள்ள நகராட்சியுடன் இணைக்கவும் கடந்த 2022 அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணை இதுவரை செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு ஊராட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சிகளில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் படி இன்று (செவ்வாய்)திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டட 10 ஊராட்சி அலுவலகங்களில் எவ்வித அலுவல் பணிகளும் நடக்கவில்லை. தூய்மை பணியாளர்கள், தேசிய ஊர வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என்று எவரும் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அவைகள் திறக்கப்படவில்லை.
இதில் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தின் முன் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 200 பேர் திடீரெனக் குவிந்து அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, மௌன போராட்டம் நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக குமரன் குடி ஊராட்சி அலுவலகத்திலும் இன்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.