பட்டா வழங்குங்கள் மாற்றுத்திறனாளி ஆதங்கம்

வீடு கட்ட பட்டா கேட்டு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பியுடன் அலையும் அக்காவின் பாச செயல் வருத்தமடைய செய்துள்ளது.

Update: 2024-03-16 06:14 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் வேல்விழி. இவரது மாற்று திறனாளி சகோதரர் குமார். இவர்களுடைய சகோதரர்கள் இவர்களை விரட்டி விட்ட காரணத்தினால் நத்தம் புறம்போக்கில் ஒரு குடிசை வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். வேல்விழி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதால் காலையில் சென்றால் மாலையில் மட்டுமே திரும்பி வருவது வழக்கம். அப்போது தனது மாற்றுத்திறனாளி சகோதரருக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்டவைகளை வைத்துவிட்டு செல்வார். இந்நிலையில் இந்த குடிசை வீட்டுக்கு பட்டா கேட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் என அலைந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேல்விழி இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது தம்பியை சுமந்து வந்து மனு அளித்துள்ளார். இதன்பின் நம்மிடம் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளி தம்பியை உடன் வைத்து வாழ்ந்து வரும் நிலையில் வாடகை வீடு கூட தங்களுக்கு தருவதில்லை என்பதால், ஆடு மேய்க்கும் தொழிலில் வந்த வருமானத்தை வைத்து நத்தம் புறம்போக்கில் ஒரு குடிசை வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில், தனது தம்பி குமாரை மாற்றுத்திறனாளி என்பதை அறிந்து அதற்கு பட்டா வழங்க இதுவரை ஒன்றை ஆண்டு காலமாக மனமில்லாமல் தங்களை அலைக்கழித்து வருகின்றனர் என அவர் மன வருத்தத்துடன் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாபெரும் பட்டா மேளாவில் பல ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கிய நிலையில், எங்களுக்கு பட்டா வழங்க மனம் இல்லையா என கேள்வி கேட்கும் அச்சகோதரியின் செயல் பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

Tags:    

Similar News