அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கல் !!
பணி நிரவல் நடவடிக்கையின் மூலம் 244 அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்ததின் அடிப்படையில் உபரியாக பணிபுரிந்து வந்த அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணி நிரவலின் முதற்கட்டமாக, சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த உபரி ஆசிரியர்கள் மே 30 ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் அவர்கள் தற்போது பணிபுரிந்து வரும் மாவட்டத்திற்குள் பிற சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 214 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டனர்.
மேலும் கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகத்தின் மூலம் அவர்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு 30 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர். இப்பணி நிரவல் நடவடிக்கையின் மூலம் 244 அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் காலியாக இருந்த 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் கல்விசார் செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.