பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சரை சாலை வசதி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.,
பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சரை சாலை வசதிக்கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-08 15:57 GMT
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், அரசு கொறடா செழியன், மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்குளம்பியம் என்ற கிராமத்தில் ஓட்டு கேட்டு சென்றனர். அப்போது, வேட்பாளர் சுதா, அமைச்சர் மகேஷ் ஆகியோரின் பிரச்சார வாகனத்தை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழிமறித்து சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டனர். அவர்களிடம் கொறடா செழியன் ரோடு போட்டு தருகிறோம் என அலட்சியமாக பதில் அளித்தப்படி வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டனர். அதை பின் தொடர்ந்து வந்த மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கத்தின் பிரச்சார வாகனத்தையும் மறித்து, சாலை மிக மோசமாக உள்ளது, இரண்டு மாவட்டம், இரண்டு தாலுகா, 5 பஞ்சாயத்துகள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரிடம் பேசிய எம்.பி., ராமலிங்கம், நான் யூனியன் சேர்மனாக இருந்த போது தான் இந்த சாலையை அகலப்படுத்தி புதிதாக போட்டுக் கொடுத்தேன். இந்த சாலையில், டிராக்டர். ஜே.சி.பி.,களை பயன்படுத்தி விட்டார்கள். அதனால்தான் சாலைகள் சேதமடைந்து விட்டது என கூறினார். அதை கேட்டு, கிராம மக்கள் விவசாயிகள் எந்த வழியாகத்தான் டிராக்டரை ஓட்டி செல்வான் எனக்கூறி ரோடு போட ஏற்பாடு செய்யுங்கள் என கொந்தளித்தனர். இதையடுத்து வெற்றி பிறகு பார்ப்போம் என எம்.பி., ராமலிங்கம் அவர்களை கடந்து சென்று விட்டார்.