குடிநீர் இயந்திரம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை !

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாடு இன்றி காட்சிப்பொருளாக உள்ளது.

Update: 2024-04-26 11:54 GMT

குடிநீர் இயந்திரம்

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, 40 தனியார் பேருந்துகள், 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருக்கழுக்குன்றம், செய்யூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், வேடந்தாங்கல், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு, அண்ணா பேருந்து நிலையத்தில், மதுராந்தகம் நகராட்சி சார்பில், தனியார் பங்களிப்புடன் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடித்து அகற்றப்பட்ட போது, பாதுகாப்பாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் உபகரணங்கள் நகராட்சி அதிகாரிகளால் எடுத்து வரப்பட்டது. தற்போது, தற்காலிக பேருந்து நிலையத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இயந்திரத்தை அதிகாரிகள் பொருத்தினர். ஆனால், குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல், அந்த இயந்திரம் பயன்பாடு இன்றி காட்சிப்பொருளாகவே உள்ளது. அதனால், கோடைக் காலத்தில் பேருந்து பயணியர் கடைகளில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. எனவே, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News