குண்டும் குழியுமான கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை !
குண்டும் குழியுமான கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-07-08 09:06 GMT
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், சுசீந்திரம் அல்லது ஆசிரமத்தில் உள்ள தேசிய புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரிக்கு வாகனங்களில் செல்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை எண்:66-ல் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் வாகனங்கள் நெருக்கடியால் மிகவும் பரபரப்பான சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் அடுத்தடுத்து குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். தொகுதி எம்.பி, அமைச்சர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இந்த சாலையில் தான் பயணம் செய்கிறார்கள். இந்த குழிகள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.