மாராந்தையில் மக்கள் தொடர்பு முகாம் - 88 மனுக்களுக்கு தீர்வு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி, அதற்கு செயல்வடிவம் அளிக்கின்ற வகையில் அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து, ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாரந்தை கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய 88 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இம்முகாமின் வாயிலாக வழங்கப்படவுள்ளன. இம்மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகள் ரீதியாக செயல்விளக்க கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.