பாமக பிரசாரத்துக்கு முன் தி.மு.க., பா.ம.க.வினரிடையே தள்ளுமுள்ளு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாமகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தோதல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காணை அருகே உள்ள சாணிமேடு கிராமத்தில் நேற்று இரவு பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரம் மேற் கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக வந்த கிராம மக்களை, பிரசாரம் நடைபெறும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி அங்கு போடப்பட்டிருந்த சாமி யானா பந்தலில் அமர வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்ததும் பா.ம.க.வினர் அங்கு சென்று கிராம மக்களை, எங்கள் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் ஏன் தடுத்து நிறுத்தி இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் எனக் கேட்டனர். அதற்கு தி.மு.க.வினர், நாங்கள் ஒன்றும் அடைத்து வைக்கவில்லை, அவர்களாகவேத்தான் வந்து இங்கு உட்கார்ந்துள்ளனர் என்றனர். இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத பா.ம.க.வினர், எங்கள் கட்சி பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த கிராம மக்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறீர்கள் என்று கூறி குற்றம்சாட்டினர். இதனால் தி.மு.க., பா.ம.க.வினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் ஒருவருக் கொருவர் வாய்த்தகராறு செய்துகொண்டு தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. உடனே காணை போலீசார் அங்கு விரைந்துசென்று இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.