பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதி செய்ய ராஜேஸ்குமார் எம்.பி அறிவுரை
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடுக - இராஜேஸ்குமார் எம்.பி அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை.
நாமக்கல் நகராட்சி பகுதிகளுக்கு சின்ன முதலைப்பட்டி, நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
முகாமை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் 39 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், அனைத்து துறை சார்ந்த பல்வேறு சேவைகளுக்கு பொதுமக்களால் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இம்முகாமில் அரசுத்துறை சார்ந்த சேவைகளுக்கு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு செங்குந்தர் சமுதாயக் கூடம் மற்றும் இராசிபுரம் நகராட்சி பகுதிகளுக்கு பூவையம்மாள் திருமண மண்டபத்திலும், ”மக்களுடன் முதல்வர்”திட்ட முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் வழங்க வருகை தரும் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி வந்து செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்முகாம்களில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி, இராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவா் அ.சுப்ரமணியம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.