குமரி பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி திடீர் அகற்றம்
பா.ஜ.க. தலைவர் ஏற்றிய ராமர் உருவம் பொறித்த காவி கொடி திடீர் அகற்றம். இதனால் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:53 GMT
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்ரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.