கந்தபொடி வசந்தத்துடன் ராமானுஜர் உற்சவம் நிறைவு
ராமானுஜர் 1,007ம் ஆண்டு உற்சவ விழா, கந்த பொடி வசந்தத்துடன் நிறைவடைந்தது. பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் கந்த பொடியை துாவி மகிழ்ந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார உற்சவ விழா, மே 3ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் பல்வேறு வாகனங்களில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், 10ம் நாளான நேற்று முன்தினம் சாற்றுமுறை விழா நடந்தது.
இரவு முழுதும் பஜனை பாடல்கள் பாடியவாறு நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வலம் வந்து, நேற்று காலை கோவிலை சென்றடைந்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 108 திவ்ய தேசமாக கருதப்படும் பெருமாள் கோவில்களில் இருந்து மாலை, பட்டு வஸ்திரங்கள், பரிவட்டம் கொண்டு வரப்பட்டு ராமானுஜருக்கு சாற்றப்பட்டன. இதை தொடர்ந்து, கந்தபொடி வசந்தம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் ராமானுஜர் மீதும், பக்தர்கள் மீதும் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை ஒருவர் மீது ஒருவர் துாவி கொண்டாடி, மகிழ்ந்தனர். இதையடுத்து ராமானுஜர் 1,007ம் ஆண்டு அவதார விழா நிறைவு பெற்றது.