ரஞ்சன்குடி கோட்டையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

ரஞ்சன்குடி கோட்டையினை மாவட்ட ஆட்சியர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-06-08 09:25 GMT

பெரம்பலூர் 

ரஞ்சன்குடி கோட்டை சுவர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் உத்தரவு. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரஞ்சன்குடி கோட்டையினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழங்கால நினைவுச் சின்னமாக விளங்குவது ரஞ்சன்குடிக்கோட்டை. சுமார் 1600 வருடம் பழமையான இக்கோட்டை 57.5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கோட்டையின் சுவர்களில் குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்தும் அவற்றின் வேர்கள் சுவர்கள் வழியாக ஊடுருவி செல்வதாலும் கோட்டையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கோட்டையின் சுவர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கோட்டையில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் கோட்டையினை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஞ்சன்குடி ஊராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாயினை பார்வையிட்ட

மாவட்ட ஆட்சியர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே கழிவு நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவருக்கும் , வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், தேவையூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News