முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2024-01-31 12:08 GMT

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.  

வேலூர்மாவட்டம், பொன்னை பகுதியில் புதியதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ 35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கவும், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக வாணியம்பாடியில் இருந்து ராணிப்பேட்டை வரை நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணைகள் கட்டப்பட்ட வருவதன் மூலம் பாலாறுகளில் நான்கு முதல் ஐந்து அடி வரை தண்ணீர் தேங்கி நீர் ஆதாரத்தை பெருக்க வழிவகுக்கும். இதனால் விவசாயிகளுக்கு பேரு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் இரு மாநில அரசுகளுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசும் தயாராக இருப்பதாக துரைமுருகன் கூறினார். முல்லைப் பெரியாற்றில் 152 அடி வரை தண்ணீரில் இருந்தது அதன் பிறகு அணை பலவீனமாக இருப்பதாக கூறி 132 அடியாக நீர் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதன் பிறகு மூன்று கட்டங்களாக நீரை உயர்த்த வேண்டும் என கேரளா அரசு தெரிவித்தது. மூன்றாவது கட்டத்தை நீரை உயர்த்தும் போது அருகிலுள்ள பேபி அணை பலவீனமாக இருப்பதால், அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு கேரளா அரசு முட்டுக்கட்டை போடுகிறது. பேபி அணை அருகில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.

அந்த மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அந்த மரங்களின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை உயர்த்துவதற்கான பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடமும் தாம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார். மேகதாது அணையில் கர்நாடக அரசு எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பு அணை கட்ட முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஆய்வு செய்தாலும் அவர்கள் படம் வரைந்தாலும் , அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும் மத்திய அரசு ஒப்புதலும் வேண்டும் . அந்த மாநில அமைச்சர் தொகுதி என்பதால், கர்நாடக அமைச்சர் இதனை வேகமாக செய்கிறார் . தமிழகத்தில் மழைவெள்ள பாதிப்புகள் குறித்து நீர்பாசன துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்ப உள்ளோம் . இந்தியா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறியதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியல் என்பது திருவிளையாடல் தான் இது போன்று கட்சி மாறுவது போன்ற திடீர் திடீர் செய்திகள் வரும் இவைகள் எல்லாம் புதிதல்ல. நாங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறோம் . திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை காங்கிரஸ் மட்டும் தான் பேசிவிட்டு சென்றுள்ளனர். என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

Similar News