பட்டியல் சமூக சிறுவனுக்கு முடி திருத்த மறுப்பு - போலீசில் புகார்
ராசிபுரம் அருகே ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டியல் சமூக சிறுவனுக்கு முடித்திருத்தம் செய்ய மறுத்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திருமலைப்பட்டி காமராஜ் நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன், 33. இவர் இந்த பகுதியில் கடந்த 33 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அருள்பாண்டியன் தனது மூத்த மகனுக்கு முடிதிருத்தம் செய்ய தெவ்வாய்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சிட்டு சலுனுக்கு சென்றுள்ளார்.இதன் உரிமையாளர் முத்து என்பவர் தான் கோவிலுக்கு செல்வதால் கடையை மூடுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால், வீடு திரும்பிய அருள்பாண்டியன் சிறிது நேரம் கழித்து மீண்டும் சலூன் பக்கமாக சென்றுள்ளார். அப்போது சலூன் திறந்து இருந்த நிலையில், வேறு ஒரு நபருக்கு முடி வெட்டிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், அருள்பாண்டியன் தனது மகனுக்கு முடி வெட்ட கேட்டுள்ளார். அதற்கு முத்து , உங்களுக்கு முடி வெட்ட முடியாது ஊர் கட்டுப்பாடு; உங்களுக்கு முடிவெட்டினால் கடை நடத்தக்கூடாது என பஞ்சாயத்தில் கூறியதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அருள்பாண்டியன் புகார் அளித்தார்.