பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மருத்துவ விடுப்பில் சென்றார்
தமிழக அரசு சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்ட நிலையில்பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மருத்துவ விடுப்பில் சென்றார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகநாதன் பொறுப்பு பதிவாளராக தங்கவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்ட பிறகு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தமிழக அரசுக்கு தொடர்ந்நது புகார்கள் சென்றது.
இதையடுத்து உயர்கல்வி துறையின் கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அரசு நியமித்தது. இந்த குழு பெரியார் பல்கலைக்கழகத்தில் 10 கட்டங்களாக ஆய்வு செய்தனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தனியார் அமைப்பினர் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை குழுவின் அறிக்கை கடந்த 5-ந் தேதி தமிழக அரசிடம் வழங்கப்பட்டது . அதில் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக பதவி வகிக்கும் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பல்கலைக்கழக பதிவாளரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பதிவாளர் தங்கவேல் இந்த மாதம் 29-ந் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் இந்த உத்தரவு வந்தது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பதிவாளர் தங்கவேலை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பதிவாளர் தங்கவேல் முதுகுவலி காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். 12-ந் தேதி முதல் (நேற்று) வருகிற 23-ந் தேதி வரை 12 நாட்கள் விடுமுறையில் செல்வதாக கடிதம் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே துணை வேந்தர் ஜெகநாதன் , பதிவாளர் தங்கவேலை நீக்க கோரி வருகிற 16-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.