பேச்சிப்பாறை அணையில் 500 கனஅடி உபரி நீர் திறப்பு
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை நீடித்து வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை, கருங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கொட்டியது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 49 மிமீ., மழை பதிவானது. களியலில் 44, அடையாமடையில் 41, பெருஞ்சாணியில் 42, புத்தன்அணையில் 40 பாலமோரில் 37, திற்பரப்பில் 32, சுருளோட்டில் 31 மிமீ., மழை பதிவானது.
தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. இன்று அணையின் நீர்மட்டம் 45.59 அடியாக உயர்ந்தது.ஏற்கனவே அணையில் இருந்து 535 கனஅடி தண்ணீர் மதகு வழியாக வெளியேறிய நிலையில் மாலையில் 500 கனஅடி நீர் உபரியாக திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீருடன் 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் கோதையாற்றில் ஓடியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, மற்றும் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.