சந்தை வளாகப் பகுதியில் மண் கொட்டி சமன் செய்து சீரமைத்துத் தர கோரிக்கை

அச்சிறுப்பாக்கம் சந்தை வளாகப் பகுதியில் மண் கொட்டி சமன் செய்து சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-23 06:12 GMT

சந்தை வளாகப் பகுதியில் மண் கொட்டி சமன் செய்து சீரமைத்துத் தர கோரிக்கை

அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான 4.1/2 ஏக்கர் நிலம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் உள்ளது. இந்த காலி இடத்தில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடக்கிறது. அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றையும், வெளியூர் பகுதி வியாபாரிகள் காய்கறிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், சிறிய அளவிலான கடைகளுக்கு 25 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சந்தை வளாகம் தாழ்வான பகுதியாக உள்ளதால், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, மக்கள் சென்றுவர முடியாத நிலை உருவாகிறது. இதனால், வியாபாரிகள் புறவழிச் சாலையை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களிடம், பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு ஏற்றாற்போல், கட்டணங்களை வசூல் செய்கின்றனர். புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், சந்தை நடைபெறும் நாட்களில், புறவழிச் சாலை வழியாக எலப்பாக்கம், திருமுக்காடு, திம்மாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை உருவாகிறது. எனவே, சந்தை வளாகப் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு, மண் கொட்டி சமன் செய்து சீரமைத்துத் தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News