கிளக்காடி கிராமத்தில் ஏரி கலங்கல் பழுது நீக்க கோரிக்கை !
கிளக்காடி கிராமத்தில் ஏரி கலங்கல்பகுதி சீரமைத்து தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
By : King 24x7 Angel
Update: 2024-03-16 10:25 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது கிளக்காடி கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 200 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தைக் கொண்டு அப்பகுதியில், 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறுகிற கரை பகுதியின் கீழே, ஓட்டை ஏற்பட்டும், கலங்கலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் தடுப்பு பலகைகள் பழுதடைந்தும் காணப்படுகின்றன. இதனால், மழைக்காலத்தில் உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதியில் ஏரிநீர் வெளியேறி போதுமான அளவிற்கு தண்ணீர் தேக்கமாகாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏரி கலங்களில் ஓட்டை ஏற்பட்டுள்ளதாலும், நீர் தடுப்பு பலகைகள் உடைந்து சிதைந்துள்ளதாலும், கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது, ஏரியில் நீர் தேங்காமல் தொடர்ந்து வெளியேறியது. அச்சமயம், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களைக் கொண்டு ஏரி கலங்கல் பகுதியில் மணல் மூட்டைகள் கட்டி தண்ணீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டது. எனவே, பருவ மழைக்காலத்திற்குள் ஏரி கலங்கல்பகுதி சீரமைத்து தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.