மீட்கப்பட்ட இடத்தில் அரசு அலுவலகங்கள் கட்ட கோரிக்கை

சோழிங்கநல்லுாரில் மீட்கப்பட்ட நிலத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-04 01:35 GMT
மீட்கப்பட்ட நிலம் 

செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லுார் தாலுகா, நுாக்கம்பாளையம் பிரதான சாலையில், சர்வே எண்: 574ல், அரசுக்கு சொந்தமான 69.07 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 1,860 கோடி ரூபாய். இதில், 20 ஏக்கர் இடத்தை, முன்னாள் படை வீரர்களுக்கு பட்டா வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வருவாய்த்துறை விசாரணையில், போலி பெயர்கள், ஒரே நபரின் வீட்டில் உள்ள உறவினர்கள் பெயர்கள் என, தவறான தகவல்கள் தெரிவித்து, பட்டா வாங்க விண்ணப்பித்தது தெரிந்தது. இதையடுத்து, 2012ம் ஆண்டு அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து, முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்., மாதம், இந்த இடத்தை மீட்டு, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், 69.07 ஏக்கர் அரசு இடம் மீட்கப்பட்டது. இந்த மொத்த இடத்தையும், தமிழக அரசு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒப்படைத்துள்ளது.

தமிழகத்தில், பெரிய தொகுதியாக சோழிங்கநல்லுார் உள்ளது. இங்கு, தாலுகா அலுவலகம், உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், பத்திரப்பதிவு, தீயணைப்பு துறை உள்ளிட்ட அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. மீட்ட இடத்தில், ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட, 10 ஏக்கர் இடமாவது ஒதுக்க வேண்டும் என, சோழிங்கநல்லுார் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கூறியதாவது: தொகுதியில் உள்ள பல காலி இடங்கள், நீர்நிலையாக இருப்பதால், அரசு அலுவலகங்கள் கட்ட முடியவில்லை. மீட்கப்பட்ட இடம், தரிசு நிலம் என்பதால், ஒருங்கிணைந்து அரசு அலுவலக வளாகம் கட்ட தேவையான இடம் ஒதுக்க வேண்டும் என கூறினார்..

Tags:    

Similar News