சுகாதார நிலையம் சேதம் காவேரிராஜபுரம் மக்கள் அவதி
திருவாலங்காடு அருகே சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-29 12:11 GMT
திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், காவேரிராஜபுரம் துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு, 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை வழங்க செவிலியர் பணியில் இருப்பர். இங்கு, காவேரிராஜபுரம் கிராமம், இருளர் காலனி, அருந்ததியர் காலனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 7,000த்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சேவைக்காக, இந்த துணை சுகாதார நிலையத்தையே நம்பியுள்ளனர். மேலும், இங்கு கர்ப்பிணியருக்கான தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால், துணை சுகாதார நிலையம் இன்றி கோவில், பஞ்சாயத்து அலுவலகம், இ - சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இரவில் செவிலியர் தங்கி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இரவில் கர்ப்பிணியருக்கு பிரசவ வலி ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கர்ப்பிணியர் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.