வெள்ளம் வடியாததால் மாற்றுவழி - மரப்பாலம் அமைத்த பகுதிவாசிகள்
Update: 2023-12-22 02:30 GMT
திருவேற்காடு, கோலடி ஏரி 220 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில் 33 கோடி கன அடி நீர் தேக்க முடியும். இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால் குளமாகிவிட்டது. ஏரிக்குள் அன்பு நகர், செல்லியம்மன் நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 பிரதான தெருக்கள், 20 குறுக்கு தெருக்களில் 1,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. நகராட்சியால் தெருவிளக்கு, குடிநீர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 2015ல் பெய்த கனமழையால், ஆற்றின் கரையை ஒட்டியுள்ள அன்பு நகர் மற்றும் செல்லியம்மன் நகர்கள், வெள்ளத்தில் மூழ்கின. அதேபோல் சூழல், மிக்ஜாம் புயல், மழையால் அன்பு நகர் தெருக்களில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்பு நகர் இரண்டாவது பிரதான சாலையில் 10 வீடுகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், தலா 3,500 ரூபாய் செலவு செய்து சவுக்கு கொம்பு மற்றும் பலகையால், தற்காலிக மரப்பாலம் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.