மக்களுடன் முதல்வா்' திட்டத்தில் 8,143 மனுக்களுக்குத் தீா்வு
மக்களுடன் முதல்வா்' திட்டத்தில் 8,143 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டதாக அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வா்' திட்ட முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், 8,143 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், 'மக்களுடன் முதல்வா்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் மேலும் பேசியதாவது : பொதுமக்களுக்கு இல்லம் தேடி சேவை அளிக்கும் நோக்கத்தில் 'மக்களுடன் முதல்வா்' என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு டிச. 18-ஆம் தேதி முதல்வா் தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிச.18-ஆம் தேதி முதல் கடந்த ஜன. 6-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 9,539 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 8,143 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, 'மக்களுடன் முதல்வா்' திட்டத்தின் கீழ், 572 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா கலாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வீரராகவன், ஆலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.