கையெழுத்து இல்லாத ரசீது கொடுத்த உணவகம் - இழப்பீடு வழங்க உத்தரவு!

கடைப் பெயர் மற்றும் கையெழுத்து இல்லாத ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-03-01 10:03 GMT

வழக்கு 

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சார்ந்த சிவஞானம் என்பவர் மில்லர்புரத்திலுள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கியுள்ளார். அதற்கு உணவகத்தின் ஊழியர் ரசீது கொடுத்துள்ளார். அதில் எந்த விதமான கடைப் பெயரோ, முத்திரையோ, கையெழுத்தோ இல்லாமல் உணவிற்கான தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை பெற்றுள்ளனர். அப்போது புகார்தாரர் உண்மையான பில் எனில் முறைப்படி ஜி.எஸ்.டி. விவரங்களோடு இருக்க வேண்டும். இல்லையெனில் ஜி.எஸ்.டி. போட்டு பணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு உணவகத்தின் ஊழியர் இதை உணவக உரிமையாளரிடம் தெரிவிப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். வெற்று பில்லை வழங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிவஞானம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் புகார்தாரருக்கு ஏற்பட்ட சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ.25,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.30,000-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News