கொட்டி தீர்த்த கனமழை நோய் தொற்று பரவும் அபாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால், சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-11 01:33 GMT

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரமானது பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெயில் சுட்டெரித்தாலும் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதுடன் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில் இரவு பலத்த இடி மற்றும் மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி மட்டுமில்லாமல் கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, மல்லி, வன்னியம்பட்டி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த அதீத கனமழையால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாலை நேரத்தில் தங்களது தேவைகளை தீர்த்துக்கொள்ள வெளியேறிய பொதுமக்கள் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் முற்றிலும் தணிந்து நகர் பகுதி எங்கும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் மாறுகால்களை சரிவர தூர்வாராததால் அடைப்புகள் ஏற்பட்டு மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Tags: