குழாய் உடைப்பால் சாலை சேதம் - 6 மாதமாக சீரமைக்காத அதிகாரிகள்

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும், சேதமடைந்த சாலையையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-02 08:15 GMT

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி

காஞ்சிபுரத்தில் பிரதான நான்கு ராஜ வீதிகளில் ஒன்றான செங்கழுநீரோடை வீதியில், காய்கறி மார்கெட், டாஸ்மாக், ஜவுளி, பலசரக்கு மளிகை கடை என, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, பெங்களூரூ, வேலுார், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள், இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கவில்லை. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சாலையின் மையப் பகுதியில் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதி வியாபாரிகள் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் தடுப்பு அமைத்துள்ளனர். குடிநீர் குழாய் உடைப்பால், தொடர்ந்து சாலையில் குடிநீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் மேலும் பல இடங்களில் நிலப்பரப்பு உள்வாங்கி பள்ளம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும், சேதமடைந்த சாலையையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News