லோன் வாங்கி தருவதாக  மூதாட்டியிடம் 7 பவுன் நகை அபேஸ் 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் லோன் வாக்கி தருவதாக கூறி பெண்ணிடம் 7 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-21 12:41 GMT
கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மங்கலக் குன்று பகுதியை சேர்ந்தவர் பாலையன் மனைவி கமலம் (65). இவர் சம்பவத்தன்று மகள் வீட்டிற்கு செல்வதற்காக நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் அருகே அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் கமலத்திடம் பேச்சு கொடுத்து லோன் வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது கமலம் தனது வீட்டிற்கு செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.

இதை கேட்ட அந்த பெண் தன்னுடன் நாகர்கோவில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் 25 ஆயிரம் லோன் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய கமலம் நாகர்கோவில் சென்றுள்ளார். கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது அந்த பெண் தங்க நகைகள் அணிந்திருந்தா லோன் கிடைக்காது, எனவே நகைகளை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதை நம்பிய கமலமும் தான் அணிந்திருந்த தாலி செயின், வளையல், மோதிரம் ஆகியவற்றை கழற்றி ஹேண்ட் பேக்கில் வைத்துள்ளார். அப்போது அந்தப் பெண் ஒரு கடையை காட்டி அங்கு சென்று விண்ணப்பம் வாங்கி வாருங்கள். பேக்கை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறி நகை இருந்த பேகை வாங்கி உள்ளார். கமலமும் பேக்கை கொடுத்து விட்டு விண்ணப்பம் வாங்க சென்றார்.

விண்ணப்பம் வாங்கி விட்டு வரும்போது பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்ணை காணவில்லை. அதன் பின்னரே தன்னை ஏமாற்றி அந்த பொன் நகைகளை பறித்தது தெரியவந்தது. இது குறித்து கமலம் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News