ரூ.12¼ லட்சம் கொள்ளை : 6 வாலிபர்கள் கைது!
தனியார் நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.;
வழக்கு பதிவு
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி தென்நந்தியாலம் பகுதியில் கடந்த மாதம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிஜாமுதின் என்பவர் தான் வசூலித்து வைத்திருந்த சீட்டு பணம் ரூ.12¼ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தனது அலுவலகத்தில் உள்ள நபீசிடம் கூறியுள்ளார். இது குறித்து நபீஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரத்தினகிரி போலீசார் வேலூரைச் சேர்ந்த ஆசிப் என்கிற அப்ரார் அகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவரும் அவரது நண்பர்களான அமின், அஜய், அஸ்வின் மற்றும் தனுசு ஆகியோர் காரில் வந்து நிஜாமுதினிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் கஸ்பாவை சேர்ந்த பிலால் மகன் ஆசிப் என்கிற அப்ரார் அகமது (25), ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த அமின் (29), ஆற்காடு பகுதி முப்பதுவெட்டியை சேர்ந்த அஜய் (23), ஜெயசந்தர் என்கிற சந்துரு (33), அஸ்வின் (21) மற்றும் தனுசு (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக தலைமறைவாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி மற்றும் சந்தோஷ் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.