பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி கொலை
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவர் சென்னை யானை கவுனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருப்பவர். பிரேம்குமார் மீது கொலை உட்பட சில வழக்குகள் உள்ளன. இவர்மீது பதிவான குற்ற வழக்கு விசாரணை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அதில் ஆஜராக ரௌடி பிரேம்குமார் தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்தார்.
பின்னர் அவர் சென்னை சென்ட்ரல் பூந்தமல்லி சாலையிலுள்ள டாஸ்மாக் கடைக்கு தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று மது அருந்தினார். கடையிலிருந்து வெளியில் வந்த பிரேம்குமாரை அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. அதைத் தடுக்க முயன்ற பிரேம்குமாரின் கூட்டாளிகளான வசந்தகுமார், நரேஷ் ஆகியோருக்கு வெட்டு விழுந்தது.
ஆனால் அந்தக் கும்பல் பிரேம்குமாரை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காயமடைந்த வசந்தகுமார், நரேஷ் ஆகியோரை அருகிலுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரௌடி பிரேம்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவிட்டார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை, வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகளும், துணை கமிஷனர் கோபி தலைமையிலான தனிப்படையைச் சேர்ந்த சரவணக்குமார், புருஷோத்தம்மன், பிரசாத் ஆகியோர் கொண்ட தனிப்படையினரும் கொலையாளிகளைத் தேடிவந்தனர். இந்தச் சூழலில் கொலையாளிகளில் சிலரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பொன்னேரி நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் சரண் அடைந்தனர். தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக ரௌடி பிரேம்குமார் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.