குமரியில் பறக்கும் படை சோதனையில் ரூ 4.12 லட்சம் பறிமுதல்
குமரியில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ 4.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இந்த பறக்கும் படை சோதனையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை 6:00 மணி வரை மாவட்டம் முழுவதும் ரூபாய் 15 லட்சத்தி 96 ஆயிரத்து 882 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இன்று நடந்த தொடர் சோதனையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ராஜா சிங் தலைமையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி என இன்று மாவட்ட முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை மொத்தமாக 23 லட்சத்து 72,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது.