ஆர்டிஎம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம் !!

சிவகங்கை ஆர்டிஎம் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்குகிறது.

Update: 2024-06-08 07:09 GMT

ஆர்டிஎம் கல்லூரி

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான சோ்க்கை ஒற்றைச் சாளர முறையில் வருகிற 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு, கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இரு சுழற்சிகளிலும், வணிக மேலாண்மை, ஆங்கிலம், தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் மட்டும் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பாடப் பிரிவுகளுக்கு இணைய வழியில் 19,264 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டை விட 2,844 விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இதற்காக, ஒற்றைச் சாளர முறையிலான முதல் கலந்தாய்வுவருகிற 10 -ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் நீங்கலாக மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாா்கள்.

400 முதல் 290 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் வருகிற 10 -ஆம் தேதியும், 289 முதல் 250 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் 11 -ஆம் தேதியும், 249 முதல் 215 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் 12 -ஆம் தேதியும், 214-க்கு கீழ் கட்ஆப் மதிப்பெண் பெற்றவா்கள் 13 -ஆம் தேதியும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, வருகின்ற 15- ஆம் தேதி சிறப்புத் தமிழ் பயின்று 60 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களும் கலந்து கொள்ளலாம். மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் காலை 9 மணிக்கு முன்பு கல்லூரிக்கு வர வேண்டும். காலதாமதமாக வருவோா் தரவரிசையிலான சோ்க்கை வாய்ப்பை இழக்க நேரிடும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல், மூன்று நகல்களுடன், 5 புகைப்படங்களும் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News